Thursday, June 22, 2006

வீட்டிலே விஷேசமுங்க

வீட்டிலே விஷேசமுங்க!.... ஆமாமுங்க, பொண்ணு பெரியவளாகி போனாளுங்க!!!!!

நமக்கு இதெல்லாம் பெரிசா பண்ணனும் அல்லாட்டா இது ஒரு விஷேசமுன்னு நினைக்க தோணலைங்க. ஆனால் நம்ப நேரம் பாருங்க, மாமனார் மாமியார் இப்போ நம்ப கூட. இல்லேன்னா அமுக்கி வாசிச்சி வேற எப்போவாது சொல்லி இருப்பேணுங்கோ. அது முடியாமல் (நம்ம பொண்ணோட நேரம் இப்படி மாட்டிகிச்சுங்க!!!)

அப்புறம் அதையேன் கேக்குறீங்கோ! வீடு ஒரே தடபுடல்தான். முதல் வேலை அவர்களை பள்ளி அனுப்பாமல் ஐந்து நாள் மட்டம் போட வைத்ததுதான் (பள்ளி திரும்பும்பொது ஃப்ளூன்னு ஒரு பொய் கடுதாசி வேற!!!) நடந்த களேபரத்தை பாத்து நம்ம பதினாலு வயது மகன் கேட்டாருங்க, "இது எல்லாம் என்னன்னு?" அவருக்கு உண்மை சொல்லோனும் என்று (இந்த ஊர் பிள்ளையில்லையா?), வந்து அவள் பெரியவள் ஆகி விட்டாள் என்று ஒரு இழு இழுத்தால் ”ஓ! இனி அவளுக்கு மாத மாத விசிட்டர் வருவார்களா?” என்று ஒரு அடி அடித்தார் பாருங்கோ!!

மாமி அடுத்து உட்கார்ந்தாள் ஊரில் உள்ள அனைவருக்கும் சந்தோஷ செய்தி சொல்ல. அடுத்த வீட்டு பூனை எலியிலிருந்து, அடுத்த ஊர் செல்லக்கிளிக்கு கூட ஒரு மணி நேரத்தில தெரிஞ்சி போச்சுங்கோ இந்நாட்டின் புதிய நிகழ்ச்சி. இதனால இன்னொரு நல்லதுன்னா, ரண்டு வருசமா சடச்சுகிட்டிருந்தா பெரிய பொண்ணோட மாமி பேசியாச்சு.(நல்ல காலத்தில ஒரு விடிவு பிறக்குமுன்னுவாங்களே, அது இதுதானா?)

இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நம்ப வீட்டிலே, விஷேசம் எப்படி, எங்கே வைப்பது? யாரெல்லாம் கூப்பிடறது?!! மண்டையிடி அளவில்லமால் எனக்கும் என்ற வீட்டுக்காரருக்கும்தான். வேறென்னா, என்னத்த சொல்லி கூப்பிடறது? நண்பர்கள் குழுவில எல்லாருக்கு பெண், ஆண் குழந்தை உண்டுங்க. பெண்ணை சமாளித்து விடலாம். பையன்களிடம் என்ன சொல்றது!!! இல்லேன்னா அவுக கேட்டு போடுவாங்களே,"எங்களுக்கு மீசை முளைக்க ஆரம்பிச்சாச்சு, ஒரு விழா எடுன்னு!!!

மூன்றாம் நாள் ஆலோசனைக் கூட்டம் தோழிகளுடன். தொலைபேசியில் விவாதம், விஷேசம் வைக்கணுமா, வேண்டாமான்னுதானுங்க. ஒரு தோழி சொன்னாளுங்கோ, அம்மாம்மாவை கேளுன்னு, நம்ப அம்மம்மாவின் விதுர ஆலோசனை தோழிகளிடம் மகாபிரசித்தமுங்க.

இப்படியாக நாலாம் நாள், அடி தொலைபெசியை அம்மம்மாவுக்கு.

அம்மம்மா: நல்ல செய்திதான் கண்ணு. அடி இன்னொரு போனஸ் எனக்கு. (பி.கு: அம்மம்மாவுக்கு தொன்னூறு வயசு. எந்த ஒரு குடும்ப விஷேசத்தையும் எண்பது வயசுலேருந்து வாழ்க்கையின் போனஸ் என்று சொல்லி கொண்டு இருக்குமுங்கோ!)

நான்: இதை ஒரு விஷேசமா கொண்டனுமாங்கம்மா? மாமியார் செய்யோனும் என்று சொல்றாங்கோ? மகளுக்கு அது ஒரு தொந்தரவாக இருக்குமே என்று நினைக்கிறோமுங்கம்மா.

அம்மம்மா: அந்த காலத்தில் இது ஒரு அறிவித்தலா இருக்கட்டுமுன்னு செஞ்சோம். இப்ப இது தேவையில்லைதான். ஆனால் உனது மாமியருக்காக நீ செய்யோனும் கண்ணு.

நான்: இந்த காலத்துலே அதுவும் இந்த ஊரில் இதெல்லாம் வேணாமுண்டு மாமியாருக்கு புரிய வைக்கலாமாங்கம்மா?

அம்மம்மா: நாங்க எல்லாம் இது மாதிரி ஏன் கொண்டாட விரும்புறோமென்னா, புள்ளைய இது மாதிரி சிங்காரிச்சி அழகு பாக்கத்தான். அது கலியாணம் கட்ற வயசு வரைக்கும் நாங்களெல்லாம், உயிரோட இருப்பமா, என்னாண்டு தெரியாத நிச்சயத்திலே இப்படி பாத்து போட்டமோன்னா நிம்மதியா இருப்போம் கண்ணு!

நான்: சரியம்மா, எத்தனாவது நாள் செய்யோனுமுங்கம்மா!

அம்மம்மா: நாள் கிழமையெல்லாம் தேவையில்லை, கண்ணு. உனது தோழிங்களுக்கு எந்த நாள் வசதியோ, அந்த நாள் தான் நல்ல நாள்.

இப்படியாக,அம்மம்மாவின் ஆலோசனையிலே ஒரு ஞாயித்துக்கிழமை பொண்ணுக்கு விஷேசம் நடத்தி போட்டோமுங்கோ!

நீங்க கேக்குறதுக்கு முன்னே சொல்லி போடுறேணுங்கோ, பையனுங்களுக்கு என்ன சொன்னோமுன்னு. அதுக்குத்தானுங்க தாய்களின் தினம் அன்று வைச்சதே!!!!!!

3 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//பெரியவள் ஆகி விட்டாள் என்று ஒரு இழு இழுத்தால் ”ஓ! இனி அவளுக்கு மாத மாத விசிட்டர் வருவார்களா?” என்று ஒரு அடி அடித்தார் பாருங்கோ!!//
:O)
அவர்களுக்குத் தெரியாது என்று நாங்கள் நினைத்துக் கொள்பவற்றை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பிடி ஏதாவது (சில வேளைகளில் தயங்கித் தயங்கி)பேசப் போகும் போதுதான் பெரியவங்களுக்குத் தெரிய வருகிறது.

siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்துகள்,செல்விக்கும் உங்களுக்கும்

கஸ்தூரிப்பெண் said...

ஆமாங்கண்ணு!!! அவருக்கு இந்த அளவு தெரியுங்கறதே நமக்கு ஒரு அதிர்ச்சிதானுங்கோ!!!