Friday, June 02, 2006

சின்ன சின்ன ஆசை - 1

அளவில்லாத ஆசைகள் கனவுகள்.அரைக்கால் பாவடை முழங்காலுக்கு மேல் போட்ட பச்சிளம் பருவத்தின் அளவில்லாத ஆசைகள் என்னற்றவை.கமர்கட் மிட்டாய் ஃபேக்டரி அதில் ஒன்று. கமர்கட் மிட்டாய் சாப்பிட்டு இருந்தால் இது புரியும். அப்போ கிடைக்கிற அஞ்சு பைசாவில் மூலையில் உள்ள செட்டியார் கடையில் மூன்று கமர்கட் கிடைக்கும். அல்லது அக்காவுடன் கூட்டு சேர்ந்து பத்து பைசவாக்கி பள்ளி பியூன் கிட்ட வாங்கினால் எட்டு கமர்கட் கிடைக்கும். இந்த கூட்டு சேருவதற்கு அக்காவை தாஜா செய்ய வேண்டும். வெறு ஒன்றுமில்லை, அதிகாலையில் சாணி கரைத்து போட்டு வாசல் கூட்ட வேண்டும். இவ்வளவு செய்து கிடைக்கும் கமர்கட் பற்றி....கருப்பு கலரில் பெரிய எலந்தபழம் அளவு இருக்கும். அந்த வயசு அளவில் யோசித்து பார்க்கும் பொழுது வெல்லமும் தேங்காயும் சேர்ந்து செய்த மிட்டாய் என்று நினைக்கிறேன் (யாராவது தெரிந்தால் சொல்லவும்). வாயில் ஒன்று போட்டால் மெதுவாக கரைந்து (கடிக்காமல் இருந்தால்) ருசிதட்டும். மறந்து கடித்துவிட்டல் பின் பற்கள் எல்லாம் ஒட்டிகொண்டு, நாக்கு நுனிக்கு வேலை வைக்கும். பல் இடுக்கில் சிக்கிகொண்டு எடுக்கும் முயற்சியில் கணக்கு வாத்தியாரிடம் திட்டு வாங்க வைக்கும். சில பல கமர்கட்களில் உள்ள கற்துகல்கள் மயிர் சிலிர்க்க வைத்து எதிரில் உள்ளவர்கள் சொல்வது நிறைய நிஜம் என்று நம்ப வைக்கும்.அடிக்கடி அப்பாவிடம் காசு கிடைக்காது. அத்தி பூத்தாற்போல் அப்பாவிடம் காசு கிடைக்கும் வரை கமர்கட் கனவுகள் இலவசமாக வந்து போகும். அப்பொழுது எடுத்த முடிவு பெரியவளாகி சம்பாதிக்கும் காலத்தில் கைப்பை நிறைய கமர்கட் வாங்குவதுதான். தூக்கம் அப்படியும் வரவில்லையென்றல், ஒரு படி மேலே போய் கமர்கட் ஃபேக்டரி வைப்பதுதான். இதுவும் ஆகவில்லையென்றால் கமர்கட் ஃபேக்டரிகாரனை கல்யாணம் செய்வதுதான்.கடைசிவரை கமர்கட் எங்கு செய்கிறார்கள் என்று கண்டு புடிக்க முடியாததால் கனவுகள் பகற் கனவுகளாகவே ஆயிற்று.பெரியவளாகி ஊர் சென்று, பள்ளியைப் பார்த்தவுடன் முதல் நினைவு ப்யூனும் கமர்கட்டும்தான். வாசிக்கும் பிள்ளைகளிடம் கேட்டால் "அப்படியென்றால் என்ன அக்கா?" என்று கேட்கிறார்கள். பள்ளியின் சின்ன பெட்டிக்கடை, விற்பதோ உருளை கிழங்கு சிப்சும், மத்திய ப்ரதேசத்து மாங்காய் அப்பளமும்.எனக்குள்ளே ஒரு சந்தேகம்!!!! கமர்கட் வித்துவான் வாரிசு இல்லாமல் இறந்து விட்டரோ????அந்தோ எனது கமர்கட் ஃபேக்டரி.

No comments: