Friday, June 02, 2006

சின்ன சின்ன ஆசை-2

பூஞ்சிட்டாக இருந்த காலத்தில் இன்னொன்று ஆசை!!!

கட்டு கட்டாக தலையில் பூ வைக்க!!

இரண்டு சுண்டு மல்லிகை 50 காசுக்கு கிடைக்கும். காய் மொக்குகளை கூட விடாமல் சரம் தொடுப்போம். மூன்று பங்காக (அம்மா, அக்கா மற்றும் நான்) பிரிக்கும் போழுதே எனக்கு மட்டும் இரண்டு இனுக்கு கூட பிரித்து அல்ப சந்தொஷம் அடைவேன். அப்பா அலுவலக விசயமாக தஞ்சாவூர் சென்றால் அக்கா கொய்யாப்பழம் கேட்க நான் தஞ்சாவூர் கதம்பம் கேட்பேன். பள்ளியில் அடுக்கு செம்பருத்தி சூடிக்கொண்டு வரும் தோழி கூட தற்காலிக எதிரியாவாள். மனோரஞ்சிதம் பூச்சூடிய தோழியோ ஜன்ம எதிரியாவாள். ரோசாப்பூ சுடியவளை நாள் முழுவதும் கேலி, கிண்டல் செய்து ஆற்றாமையை அடக்கிக் கொள்வேன். பனி பெய்யும் மார்கழி மாதத்தில் அதிகாலை ஐந்தரை மணிக்கு அரை மைல் நடந்து பத்து பைசாவுக்கு நூறு டிசம்பூர் பூ வாங்கி கட்டி வைத்துகொள்வேன்.

வீட்டின் பின்புறம் உள்ள அரையடி நிலத்தில் கனகாம்பரம் வளர்க்க எடுத்த பிரம்ம பிரயத்தனங்களை பற்றி ஒரு தொடர் கதையே எழுதலாம். பாட்டி வீட்டில் உள்ள சந்தன முல்லை கொடியில் ஏன் பரண் அமைக்கக்கூடாது என்று பெரிய ஆராய்ச்சியே நடத்தி உள்ளேன். பவள மல்லி பூவை ஏன் சூடக்கூடாது என்ற பட்டி மன்றம், அம்மம்மாவின் மேடையிலே தோற்று விட்டது.

கல்லூரி பெண்கள் விடுதி தோட்டத்தில் முல்லை பூ பந்தல் போட்டு முதல் பூவை பார்த்தவுடன் பிரசவித்த இறுமாப்பு. தொடுத்து, சூடிய சரத்திற்க்கு எதிரி சகமாணவன் ரூபத்தில். பதினெட்டு மாணவர்களில் ஒரு மாணவியாக இருந்ததால், பாலு சொன்னான் ” பூ வைக்காதே! எங்களில் ஒருத்தியாக இருக்க மாட்டாய்”

அப்பொழுது எடுத்த ஒரு முடிவு, பெரியவளாகி தோட்டம் சூழ்ந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சம்பளம் எல்லாம் பூக்காரனுக்கு என்று!!

இத்தனை பூ பைத்தியம் கண்டு அம்மா சொல்வாள் “ எந்தப் பூ இல்லாத காட்டில் உனக்கு கல்யாணமோ என்று?”

மதுரை மாப்பிள்ளை கிடைத்தவுடன் அம்மாவின் வாக்கு பொய்யானதோ என்ரு நினைத்தேன்!!! அல்ப சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. மாப்பிள்ளை வேலை தலைநகர் தில்லியில். தமிழ்நாடு விரைவு வண்டியில் வழியெல்லாம் பூங்கொத்து கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். வீட்டை அடைந்ததும் மனது ஜிவ்வென்று பரந்தது, விரிந்திருந்த அடுத்த வீட்டு சிவப்பு ரோசவைப் பார்த்து. அடுத்த வீட்டு பஞ்சாபி மாமிக்கு இட்லி, சாம்பார் கொடுத்து எப்படியாவது ஒரு ரோசா சம்பாரித்து விடலாம் என்று அந்த நிமிடமே ஒரு உள்மனது தீர்மானம். அப்படியாக ஒரு நாள் ரோசா சம்பாரித்து கல்லூரிக்கு சூடிக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தால் அத்தனை மாணாக்கர்களின் முகமும் அமுக்கவொண்ணா சிரிப்புடன். அர்த்தம் புரியாமல் சக விரிவுரையளரிடம் விசாரித்தால் புரிந்தது, தில்லியில் பூ வைக்கும் பெண்ணுக்கு வேறு ஒரு அர்த்தம் என்று!!!!

வீட்டுக்கனவு என்னவோ நினைவானது சிட்னி மாநகரில். பூக்கனவு பகற்கனவு ஆகிவிட்டது!!!

வழியில் உள்ள பூக்களை ஒரு நிமிடம் தலையில் சூடிய கனவு கண்டு, அதிக ஆசை இருந்தால் பூ- வரிசை படங்களை (உபயம் – கோலிவுட்) சின்னத்திரையில் கண்டு வாழ்க்கை உருண்டு கொண்டு உள்ளது.

அந்தோ! நானும் ஏனது பூ ஆசையும்.

10 comments:

கார்திக்வேலு said...

வாங்க "பூக்காரம்மா" .
எழுத்து நடை நல்லா இருக்கு .
எம் பின்னூட்டம் முதல் பின்னூட்டம் :-)

வல்லிசிம்ஹன் said...

கஸ்தூரிபெண்,
உங்க எழுத்து நல்லா இருக்கு. பூ பைத்தியம் யாரை விட்டது? எனக்கு மருதாணியை கண்டால் இன்னும் ஆசைதான். கண்ணாடி வளையல்கள். மகிழம்பூ. வாழ்த்துக்கள்.

கஸ்தூரிப்பெண் said...

நன்றி கார்திக்.
பூ-விடம் மயங்காதவர்கள் உண்டோ?

கஸ்தூரிப்பெண் said...

மகிழம்பூக்கு அடிமையாகாதவர்களையும், மாம்பழம் விரும்பாதவர்களையும், மருதாணி வாசனை பிடிக்காதவர்களையும் அந்தமான்(இல்லை , இல்லை வேறு எந்த) தீவிற்க்காவது நாடு கடத்தி விடலாம்.

கார்திக்வேலு said...

Apol if I sound dumb :-)

தாழம்பூதான் மகிழம்பூவா ,இல்லை இரண்டும் வெவ்வேறா?

(You can remove word verification ,its redundant if you already have comments moderation enabled )

கஸ்தூரிப்பெண் said...

தாழம்பூ கொத்தாக காட்டுப்புதர்களில்தான் கிடைக்கும். மஞ்சள் நிறத்தில் சிறு முற்களுடன் இருக்கும்
மகிழம்பூ மரத்தில் இருந்து கிடைக்கும் சிறிய பூக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கஸ்தூரி, எனக்குத் தெரிந்த ஒருவர் மருதாணி வைத்தல் என் பக்கம் வராதே என்பார். அவரும் பெண்தான்.
உங்க யொசனைப்படி அவரை மனசிலேயெ நாடு கடத்திவிட்டேன்.ஒரெ ஒரு ஆசை அந்த்தத் தீவு பூராவும் மருதாணி வாசனை அடிக்கணும்.

siva gnanamji(#18100882083107547329) said...

பூச்சரம் தொடுப்பது மணம் வீசுகின்றது
நளினமான நடை...வாழ்க!

ரவி said...

நன்றாக எழுதுகிறீர்கள்...

வேர்டு வெரிபிகேசனை தூக்கிவிடவும்..

வடுவூர் குமார் said...

Tamil to English

நல்லா இருக்கே!!
இதன் கோட் என்கேயிருக்கு?
நானும் ஏத்திக்கிறேன்.