Tuesday, December 12, 2006

தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்!!!–2

இன்னக்கி காலையில, பொண்ணோட பள்ளியில பரிசளிப்பு விழா. ஆண்டு இறுதியில, ஒவ்வொரு பாடத்திலயும் சிறப்பா செஞ்சவங்களுக்கு பரிசு கொடுக்கிற விழா. நம்மூரு மாதிரி ஆண்டு விழான்னு நடத்தாம, காலைப் பிரார்த்தனை கூட்டத்தில் வைச்சு கொடுக்கிறாங்க. பார்லிமெண்டு உறுப்பினருதான் சிறப்பு விருந்தினர். கருப்பு பூனை, சாம்பல் பூனையின்னு கலர்ப்பூனைகள் இல்லாமல், தானாகவே வண்டியோட்டி, பள்ளியின் பக்கத்து சந்தில் காரை நிறுத்தி நடந்து வரும் சாதரணமான ஜனநாயக உறுப்பினர்.

இது இப்படியிருக்க, நம்ம பிரச்சனை ஆரம்பிச்சதெல்லாம், பிள்ளைகள பெயர் சொல்லி பரிசு வாங்க கூப்பிடறப்பதான். பொண்ணு பள்ளியில படிக்கிறதுல எண்பது சதவிகித பிள்ளைக இந்தியா அல்லது இலங்கை நாட்டைச் சேர்ந்தவங்க. ஊருல உள்ள சாமி, குலதெய்வம், அம்மா தாத்தா, அப்பத்தா, அம்மாச்சின்னு விவரணையா நம்ம பிள்ளைக பேரு. அத கொள்ள(ல்ல) பிரியம் இங்க உள்ளவங்களுக்கு.

காயத்ரி-ய காய் ஆட்ரி-ன்னு பிரிச்சி கூப்பிட்டா, பக்கத்துல உட்கார்ந்திருந்த அம்மாக்காரிக்கு, பொண்ணு பரிசு வாங்க போனப்பதான், கூப்பிட்டது தன் பொண்ணையின்னு விளங்குது. வீடியோ காமரா, டிஜிடல் காமரான்னு முத்தாய்ப்பா உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மா, தன் புள்ள பேரோட வாசிச்ச தன் புருஷன் பேர கேட்டு மயக்கமாகாத குறைதான்!!! பின்ன என்ன, கருணாநிதின்னு கருணை உருவமான பேர, கருண் அனிதின்னு(Karun anidhi) வாசிச்சா வருமா வராதா மயக்கம். குசேலராசன், குஸ் ஹலராசனாவும், ராசேந்திரன் ரசந்திரனுமாகவும் இவங்க வாயில பூந்து புறப்படும்.

ஆனா அதே சமயத்துல, மகாவ்ச்கி, பொலாவ்ச்கின்ற போலந்து பெயரையும், இவானிசெவிச், டொமினிசெவிச்-ன்ற ரஷ்யா பெயரெல்லாம் அட்சர சுத்தமா கூப்பிடுவாங்க. அவங்க பெயர கொஞ்சம் நீட்டியோ, சுருக்கியோ சொல்லிட்டோமுன்னா, மூக்குக்கு மேல வர கோபத்த அடக்கிகிட்டு, அமண்டா இல்ல, அமாண்டா-ன்னு சொல்ல சொல்லி ஒரு வீட்டு பாடம் கொடுத்துட்டு போவாங்க!!! இதுக்கெல்லாம் பயந்துகிட்டு பவானி குமார், பீட்டர்-ன்னும், தியாகராஜன், டாம்-ன்னும் பெயர மாத்திகிட்டாங்க.

எல்லாம் விதின்னு, வெந்து நொந்து, விழா முடிவுல காபி குடிக்கையில, பக்கத்துல உள்ள தோழியோட அவசர ஆலோசனை. இந்த ஊரு ஆளுங்களுக்கு உச்சரிப்பு வகுப்பு எப்ப ஆரம்பிக்கலாமுன்னு. வாரத்துக்கு எத்தனை வகுப்பு எடுக்கலாம், இலவசமா அல்லது காசு கொடுத்தா, எவ்வளவு பணம் சம்பாதிக்கலாமுன்னு ஜெட் வேகத்துல ஓடுது மனக்குதிர ஒரு பக்கம். பட்டாசு மாதிரி வெடிக்கிறா தோழி, “இதெல்லாம் இவங்களுக்கு சரிப்படாதப்பா. ஒரு தடவை இல்ல, ரண்டு தடவை இல்ல, பல்லாயிரம் தடவை சொல்லச்சொல்லி சொன்னாலும், நம்மூரு பெயரு இந்த ஆளுங்களுக்கு வாயில நுழையப் போவதில்லை. நாக்குல தர்ப்பைய சுட்டு போட்டாலும், இவங்களுக்கு வாயில வரப்போறது கிடையாது” னு ஆணித்தரமா அவ அடிச்சு பேசும்போது எனக்கு பிடிபடல வினையே அங்கதான் ஆரம்பிக்க போதுன்னு.

எதுத்தாப்புல பொண்ணு உட்கார்ந்து கேள்வி கேக்குது, “எதுக்காக, தர்ப்பைய சுட்டு போட்டாலும் வாயில வராதுன்னு சொல்லுவாங்க?”

எனக்கு புரியலிங்களே, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!!!

Monday, December 11, 2006

தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்!!!–1

மைசூர் பாகு, மைசூர் பாகுன்னு ஒரு இனிப்பு.
செய்ய தெரிஞ்சவங்களையே கிளறி முடிக்கறதுக்குள்ள ஒரு கலவரப் படுத்திவிடும். அம்மா எடுத்தது, தொடுத்ததுக்கெல்லாம் இந்த இனிப்ப பண்ணி போட்டுறுவாங்க. விருந்தாளி வந்துட்டா வீட்டுல ஒண்ணும் இல்லைன்னா, குடுகுடுன்னு ஒரு சட்டி வைச்சு, வந்தவங்க கால், கை கழுவி துடச்சி உட்காரதுக்குள்ள செஞ்சு முடிப்பாங்க. அம்மா பண்ணுற மைசூர் பாகும் அதப் பத்தின சிலாகிப்புமே வந்த விருந்தாளியோட முதல் பேச்சாயிருக்கும். (தஞ்சாவூர்க்காரியா? கொக்கா?)

இது இப்படியிருக்க, போன வாரம் இந்த இனிப்ப நானும் செஞ்சு புள்ளைக பல்லையும் பதம் பார்த்தேன். அப்பதான், புதுசா தமிழ் கத்துக்கிற மகன் இதோட பெயர்க்காரணம் கேட்டாரு. அட, இத்தன நாளு இப்படி யோசித்தது கூட கிடையாது….யோசிக்கும்போது எதனால இப்படி ஒரு பெயருன்னு புலப்படல்ல!!!

ஒரு வேள இப்படியிருக்குமோ!!! அப்பல்லாம் சந்தையில புதுசா வர சாமானுக்கு பேரெல்லாம் பங்ளூரு கத்தரிக்காய், மைசூர் சில்க், பங்களூரு தக்காளின்னு பேரு வைப்பாங்க. அந்த வகையில புதுசா வந்ததுனால மைசூர் பாகுன்னு பேரோ!!!

இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோமுன்னு மண்டை காஞ்சதுதான் மிச்சம். டீச்சர கேக்கலாமுன்னா, கடைய மூடிட்டு வனாந்திரம் போயிட்டாங்க!!!!

அட, தெரிஞ்ச யாராவது சொல்லுங்களேன்!!!!

Thursday, November 09, 2006

ஏய் அழகாயிருக்கிறாய், ஆச்சரியமாய் இருக்கிறது

இயற்கையின் விந்தைகள்தான் எத்தனை!!!!!!

செக்குமாடு போல் சுத்தும்
நமது வாழ்க்கையில்
இந்த விந்தைகளை வியப்பதற்குதான்
நேரமுண்டா?

உடன் எழுகிறோம்
உடன் துயிலுகிறோம்
வரவில்லையென்றால் வருந்துகிறோம்
காட்டம் அதிகமானால் துவளுகிறோம்

அய்யா, வணக்கமுன்னு சொல்லத்தான் நமக்கு நேரமில்லை,
ஏய், அழகாயிருக்கேன்னு சொல்லித்தான் வைப்போமே!!!

உலகம் சுற்றும் வாலிபத் தம்பிக்கு
கல்யாணத்துக்குமுன்ன நேரத்துக்கு பஞ்சமில்ல
அகப்பட்டதெல்லாம் க்ளிக்கினான் – கைப்போட்டியில
அக்கா, இதுதான் அழகுன்னு வண்ணமயமாக்கினான்…..


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!!!!

மஞ்சள் வானம் – பேங்காக், தாய்லாந்து

href="http://photos1.blogger.com/blogger/5182/3068/1600/Bangkok_Thailand.jpg">












ஹோஸூர் ஏரிக்கரை














மேட்டூர் அணை மலையடிவாரம்













ஜனாதிபதி மாளிகை - புதுதில்லி













சிங்கை சென்டோஸாத்தீவு













ஷியோஹாமா, டோக்கியோ














கிருஷ்ணகிரி காட்டில்













நரிட்டா விமானநிலையம், ஜப்பான்













அட நம்மூருதாங்க, தைமாச பொங்கலுக்குன்னு வந்த சிறப்பு சூரியனுங்க!!!!!

Thursday, November 02, 2006

என்ன தவம் செய்தனை!!!!!

எங்க ஊரு சிங்காரவேலருங்க!!

வருஷா வருஷம் பங்குனி மாசத்துல இவருக்கு ஒரு திருவிழா. பத்து நாளும் கோலாகாலமா ஒரு கலகலப்புதான்.

பத்து நாளும் மண்டகப்படி சில சில ஊருங்களுக்குன்னு கொடுத்தாலும், கடைசி நாளு திருக்கல்யாணம் நம்ப இளைஞரணிக்குதாங்க. பெருசுங்க சொல்றது என்னன்ன, வளருர புள்ளைக கல்யாணமெல்லாம் நம்ம கலாசாரத்துபடி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிக்கனுமுன்னுதான் இவுகள போட்டுருக்கோமுன்னு.(இது எப்படியிருக்கு!!!!)

இதுதான் சாக்குன்னு, நாங்க ஒரே கலக்கல்ஸ்தான்.....

மணப்பந்தல்














ஒவ்வொரு வருஷமும் போடற மணப்பந்தல், முந்தைய வருஷத்த மிஞ்சனுமுன்னு கூட்டத்துமேல கூட்டம் போட்டு மண்டைய குத்தி சீத்தல சாத்தனாரு ஆவாரு, இளைஞரணி ஆஸ்தான ஆர்கிடெக்ட். இவரு போடற வடிவத்த முந்தின நாளு ராத்திரி வரைக்கும் ராஜரகசியமா வைச்சிருப்பாரு!!!! காலங்காத்தால பூக்கூடைகள கொடுத்துட்டு டிசைன் சொல்வாரு. இந்த வருஷத்து மணப்பந்தல்தான் இங்க உள்ளது. பூவ வெச்சி மின் கோந்து துப்பாக்கியால ஒட்டி முடிக்கறதுக்குல, ஒரு நாலு, அஞ்சு பேராவது சூடு போட்டுக்குவோம்.

கல்யாணக் களைப்புல வள்ளி, தெய்வானை மணவாளன்














திருக்கல்யாணம் தாரை வார்த்து கொடுப்பது, அந்த வருஷம் இளைஞரணியில திருமணமான புதுத்தம்பதிகள்.

தண்டிகையில் - திருமண ஊர்வலம்














திருக்கல்யாணம் முடிஞ்சவுடன், தம்பதிகள் தண்டிகைங்கிற இந்த வாகனத்திலதான் வீதிவலம் வருவாங்க. பார்க்க மயிலு மாதிரி இருக்கும். இதில வீதிவுலா பார்க்கும்போது, நமக்கே ஒரு பொன்னூஞ்சல்ல போன பிரமை பிடிக்கும்.
















திருக்கல்யாண கூட்டமும், கலைஞர்களும்















திருக்கல்யாணத்தன்னிக்கி கூட்டம் மென்னிய புடிக்கும். சாம்பிளுக்கு எள்ளு போட்டா எண்ணெயாயிடும். அவுக அவுக, கல்யாண சேலையெல்லம் அன்னைக்கிதான் மக்கள் தரிசனம் எடுக்கும்.

நாயனம், மேளம் எல்லாம் நம்ப இலங்கை, நம்ப ஊருல இருந்து வந்து பத்து நாளும் காது குளிரப் பண்ணுவாங்க!!!!

இப்படியாக, இளைஞரணி பட்டு வேஷ்டியிலயும், புடவையிலும் கிளுகிளுப்பத பார்க்கிறப்போ "என்ன தவம்செய்தோம் சிங்காரவேலவான்னு" சின்னதா புளகாங்கிதம் அடையச்சொல்லும்.

Friday, August 18, 2006

இப்படியும் ஒரு கணக்கு

ஒரு வருசத்துக்கு - 8896.66 வெள்ளி
ஒரு மாசத்துக்கு – 741.38 வெள்ளி
ஒரு வாரத்துக்கு – 171.08 வெள்ளி
ஒரு நாளைக்கு – 24.24 வெள்ளி
ஒரு மணி நேரத்துக்கு – சராசரி ஒரு வெள்ளி

இது என்ன கணக்கு தெரியுமா? எங்க நாட்டு அரசாங்க கணக்கு.

மத்திய வர்க்க குடும்பத்துல ஒரு குழந்தையப் பெத்து 18 வயசு வரைக்கும் வளக்கறதுக்கு ஆகுற செலவு 160140 வெள்ளிகள். (இந்திய ரூபாயுக்கு 52,84,620 ). இது பள்ளிகூடம் படிக்கிற வரைக்குந்தான். காலேஜ் செலவு, நன்கொடை எதுவும் கிடையாது. (ஆத்தாடி, இம்புட்டு ரூவாயான்னு ஏங்கறது என் மாமியாருதான்!!!!)

இத பார்க்கும் பொழுது கொஞ்சம் பணம் பார்க்கணும்னா குழந்தைய வேணாமுன்னு இருக்கறதுதான். அப்படியும் இருக்கிறாங்கோ நிறைய பேர் இங்கே. அவங்களுக்கெல்லாம் DINKS- ன்னு பேரு- Double Income No Kids). இவங்களுக்கெல்லாம் தெரியுமா, என்னத்த இழக்கிறாங்கன்னு???

160140 வெள்ளி செலவு செஞ்சா:
நம்ம இஷ்டத்துக்கு பேரு வைக்கலாம் (தற்காலிக தலைவராயித்தான்)
கோவிலுக்கு போகாமலே கடவுள தினத்துக்கு பார்த்துக்கலாம்
நடு ராத்திரி போர்வைக்குள்ளேர்ந்து சிரிப்பையும்(சிலசமயம் அழுகையையும்) கேட்கலாம்
உங்களாலேயே தாங்க முடியாத பாசத்தை பார்க்கலாம்
Flying கிஸ்ஸையும், ஐ லவ் யூ அப்படின்னு அடிக்கடி கேட்கலாம்
எறும்பையும், மரத்தையும், யானையையும், பூனையையும் பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம்
பற்றிக் கொள்ள ஒரு கை கிடைக்கும் (என்னா, மிட்டாய் பிசுக்கும், ஐஸ் க்ரீம் சபக்கும் சேர்த்துத்தான்)
வேலையே பறிபோயிருந்தாலும், கப்பல் கவிழ்ந்திருந்தாலும், வீட்டுக்கு வந்தோன்ன சிரிக்கலாம்

160140 வெள்ளி கொடுத்து, உங்க வயச மறந்துட்டு:
க்ரேயான் கலரடிக்கலாம்
சாட்-பூட்-த்ரீ விளையாடலாம்
ஒளிஞ்சு புடிச்சு விளையாடலாம்
தட்டாம்பூச்சி பிடிக்கலாம்
இடி இடிச்சா அர்ஜூனா காப்பாத்துன்னு சரணடையலாம்

160140 வெள்ளி கொடுத்து:
மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு, ஜேம்ஸ்பாண்ட் கதை படிக்கலாம்
எந்த தொந்தரவுமில்லாம Tom and Jerry கார்ட்டூன் பார்க்கலாம்
வெட்கமில்லாம அரிச்சுவடி திரும்ப படிக்கலாம் (இந்த முறையாவது சரியா படிக்கலாம்)

160140 வெள்ளி கொடுத்து அப்பப்ப வீட்டுல கதாநாயகன் ஆகலாம், இப்படி:
ஒழுங்கா பட்டம் விட்டு
சைக்கிள் சங்கிலி மாட்டி விட்டு
சரியா பம்பரம் குத்தி
குறி தவறாம கோலி அடிச்சி
காலுல தச்ச முள்ள நோகாம எடுத்துவிட்டு
சரியா பௌலிங் போட்டு

160140 வெள்ளி கொடுத்து, சரித்திர நிகழ்வுகள கண்கூடா பார்க்கலாம்:
முதல் அடியெடுத்து நடந்தத
முதல் வார்த்தை பேசியத
முதல் முத பள்ளி சென்றத
முதல் மேடையேற்றத்த
முதல் முற காரோட்டியத

160140 வெள்ளி கொடுத்து,
இலவசமா மனவியல், செவிலியியல், நீதியியல் அப்படின்னு எல்லா துறையிலும் முதுகலை பட்டம் வாங்கிவிடலாம்.

இப்படி எல்லாம், 160140 வெள்ளி கொடுத்து வேறெங்காவது கிடைக்குமா? சொல்லுங்களேன்

டிஸ்கி: இது எங்கேயோ படிச்ச கட்டுரையின் பாதிப்பு!!!!!

Friday, July 28, 2006

நாங்க ரெடி, 1087 பேரு ரெடியா????

வெனிஸுல பார்ட்டிக்கு எல்லா தயார் செஞ்சாச்சுங்க. ஏற்பாடெல்லாம் எப்படி????
சும்மாவா பின்ன, 500 மணி நேர மைக்ரோசாஃப்ட் ஒவியமாச்சே!!!!

Wednesday, July 26, 2006

வாழ்த்துக்கள் மழைப்பெண்ணெ!!















என்னங்க, மழை வர மாதிரி இருக்குல்ல?
பின்ன இருக்காதா,
மழையோட
பிறந்த நாளன்னக்கி.
வாழ்த்திவிடுவோமே மழைப்பெண்ணை,
“பல்லாண்டு வாழ்க”