அது ஏனோ இந்த கலரிடம் ஒரு தனி மயக்கம். பின்ன நீங்களே சொல்லுங்கள், கறுப்பு என்று ஒரு கலர் இல்லையென்றால் எத்தனை இழப்புகள்.
தலைமுடி கறுப்பாக இல்லையென்று எத்தனை பேருக்கு வருத்தம். வெள்ளை முடிக்காரரையும், இளநரைக்காரரையும் கேட்டால் தெரியும் முடியகத்தில் அவர் செலவழித்த பணக்கணக்கு.
இந்த கலர் முடிக்காரர்களை இதில் சேர்க்க வேண்டாம். என்னதான் காசு கொடுத்து கலர் அடித்துக்கொண்டாலும், புருவத்தையும் இமைமுடிகளையும் கருப்பாகத்தான் சாயம் பூசிக்கொள்கிறார்கள். இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு பிய்த்துக்கொண்டு போகும் சிரிப்பு. முடி நெற்றிக்கு மேலே பழுப்பு, சிவப்பு, வெண்சிவப்பு, சாம்பல் சிவப்பு, நெற்றிக்கு கீழேயோ கருப்பு. எனது மகனின் நர்சரி கார்ட்டூன் போல இருப்பார்கள்.
குழந்தை பிறந்தவுடன் முதல் கேள்வி, கறுப்பா சிவப்பா என்றுதான். மனதுக்குள்ளே அவர்களுக்கு ஒரு பதில்” எதுவாயிருந்தால் என்னய்யா! இரண்டு கால் கையோடு ஆரோக்கியமாக உள்ளதென்று”.
நான் மட்டும் கருப்பாக உள்ளேனே என்ற அங்கலாயிப்புக்கு, அம்மம்மாவிடம் ஒரு சொலவடை உண்டு. “ சும்மாயிருடி, சிவப்பிக்கு நகைப் போட்டு செருப்பாலே அடி, கறுப்பிக்கு நகை போட்டு கண்ணாலே ஒத்திக்கோ” என்று.
இந்த வெள்ளைக்காரர்களையோ கேட்கவே வேண்டாம். இப்படி மப்பு புடிச்சவர்களெல்லாம் இப்ப காசு கொடுத்து solarium-ல் கலர் மாற்றம் செஞ்சுக்கிட்டு வராங்க. எக்குமாத்தா நம்ம கையில ஒரு ஆராய்ச்சிகட்டுரை மாட்டிக்கொண்டது. கறுப்பு தோல்காரருக்கு தோல் புற்று எதிர்ப்பு சக்தி அதிகம் என்று. கேட்கவே வேண்டாம், இப்ப கைவசம் வைத்துக்கொண்டு எவள் நம்ம கலரை பழித்தாலும் அவளுக்கு ஒரு பதில் கொடுத்து இறுமாப்பு அடைந்து வருகிறேன்.
இப்பொழுது புரிகிறதா, கறுப்பின் மகிமை.
Wednesday, June 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment