Monday, June 26, 2006

நினைவாற்றின் ஆறு

மழைப்பெண்ணே, இத்துனை கஷ்டமாக ஒரு கேள்வியை அனுப்பி விட்டீர்கள். இதை விட விண்மீண்களை எண்ண சொல்லியிருக்கலாம்.

நினைவுகளை அளக்க கோல் ஒன்றும் தெரியவில்லை. எனினும் தட்டி விட்ட நினைவுக்குதிரைகள் வெகு தூரம் இழுத்து சென்று விட்டது. இழுத்து கடிவாளத்தைப் போட்டு விட்டு இந்தோ சில மலரும் நினைவுகள்


இப்படி நடந்திருந்தால்

1. பொறியியல் கல்லூரிக்கு மாறாமல் மருத்துவ கல்லூரியிலே தொடர்ந்து படித்திருந்தால்:
2. சுந்தரை (அவருதாங்க என்ற வீட்டுகாரர்) சந்திக்காமல் இருந்திருந்தால்
3. சென்னையில் வேலை கிடைக்காமல் இருந்திருந்தால்
4. தாய்நாட்டிலே இருந்திருந்தால்
5. மழைப்பெண்ணை சந்திக்காமல் இருந்திருந்தால்
6. வேறென்னங்க இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்

விம்மி பம்மும் தருணங்கள்:
1. “ஜன கன மன” என தேசிய கீதத்தை சினிமாவில் பாட கேட்டாலும் மூச்சு முட்டி நெஞ்சு செருமுவது
2. கல்யாணமாகி மகள் தாய் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது அனைவரும் கண்ணீருடன் வழியனுப்ப அந்த இடத்தில் என்னையும் எனது குடும்பத்தையும் இருத்தி கண்டு விம்முவது
3. பிள்ளைகள் மேடையில் பரிசு வாங்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்ணில் வழியும் ஈரத்துளிகளில் பெருமிதப்படுவது
4. நான் செல்லாத குடும்ப நிகழ்ச்சியன்று அனைவருடம் தொலைபேசியில் பேசி, என்னை மட்டும் அனாதையாக இங்கு அனுப்பி விட்டீர்களே என்று குற்றம் சாட்டி கேவுவது
5. பிள்ளைகளின் எதிர்பாராதப் பரிசைப்பார்த்து ”என்ன தவம் செய்தேன் யசோதா” எனக் களிப்பது
6. பிள்ளைகளின் முதல் ஸ்பரிசத்தை இன்றும் உராசிப்பார்த்து பம்முவது

மனதை உராயும் திரைப்பாடல்கள்:
1. மௌனமான நேரம் - சலங்கை ஒலி
2. கண்ணாளனே - பம்பாய்
3. ஏதோ ஒரு பாட்டு - அழகி (என்று நினைக்கிறேன்)
4. ராசாவே உன்னை – வைதேகி காத்திருந்தாள்
5. போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்
6. மேகமே மேகமே - பாலைவனச் சோலை

பிடித்த கவிஞர்கள்:
1. கவியரசு கம்பர்
2. பாரதியார்
3. மு. மேத்தா
4. வைரமுத்து
5,6. இன்னும் யாரும் மனதைத் தொடவில்லை


திரும்ப திரும்ப வாசிக்கும் புதினங்கள்:
1. மோகமுள்
2. பச்சைவெயில் மனது
3. மெர்க்குரிப் பூக்கள்
4. செயகாந்தனின் இலக்கிய சிந்தனைகள்
5. Atlas shrugged
6. Fountainhead


இதமாக பரவசமான நேரத்துளிகள்:
1. நீ, இனி ஊருக்கு செல்லவேண்டாம், ஏனெனில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சுந்தர் சொன்ன நேரம்
2. பெற்றோர் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளவேண்டிய நிலையாகும் போலுள்ளதே என்று விசனப்பட்ட நேரம், நடு இரவு தட்டிய கதவை திறந்த பொழுது நின்ற தாய் தந்தையரைப் பார்த்த பொழுது
3. நீ சூள் கொண்டுள்ளாய் என்று பெண் மருத்துவர் சொன்ன பொழுது
4. இரண்டாவது குழந்தை பெண் என்று பிரசவத்தின் பொழுது இருந்த குழந்தை மருத்துவர் கூறிய பொழுது
5. குடிபெயர்ப்பு விசா கிடைத்துவிட்டது என்ற ஈமெயில் படித்த பொழுது
6. 14 ஆண்டுகள் தேடிய தோழியை, இறுதியில் கண்டுபிடித்து அளவலாவிய நாள் அவளது பிறந்த நாள் என்று அடுத்த நாள் அவளது ஈமெயிலிலிருந்து அறிந்த பொழுது.

போறுங்க இந்த விளையாட்டு…….

நினைவுகளை மடை போட்டு நிறுத்த முடியவில்லை. இதை படிக்கும் அனைவரும் நினைவுகளை அலசுங்களேன்.

Thursday, June 22, 2006

வீட்டிலே விஷேசமுங்க

வீட்டிலே விஷேசமுங்க!.... ஆமாமுங்க, பொண்ணு பெரியவளாகி போனாளுங்க!!!!!

நமக்கு இதெல்லாம் பெரிசா பண்ணனும் அல்லாட்டா இது ஒரு விஷேசமுன்னு நினைக்க தோணலைங்க. ஆனால் நம்ப நேரம் பாருங்க, மாமனார் மாமியார் இப்போ நம்ப கூட. இல்லேன்னா அமுக்கி வாசிச்சி வேற எப்போவாது சொல்லி இருப்பேணுங்கோ. அது முடியாமல் (நம்ம பொண்ணோட நேரம் இப்படி மாட்டிகிச்சுங்க!!!)

அப்புறம் அதையேன் கேக்குறீங்கோ! வீடு ஒரே தடபுடல்தான். முதல் வேலை அவர்களை பள்ளி அனுப்பாமல் ஐந்து நாள் மட்டம் போட வைத்ததுதான் (பள்ளி திரும்பும்பொது ஃப்ளூன்னு ஒரு பொய் கடுதாசி வேற!!!) நடந்த களேபரத்தை பாத்து நம்ம பதினாலு வயது மகன் கேட்டாருங்க, "இது எல்லாம் என்னன்னு?" அவருக்கு உண்மை சொல்லோனும் என்று (இந்த ஊர் பிள்ளையில்லையா?), வந்து அவள் பெரியவள் ஆகி விட்டாள் என்று ஒரு இழு இழுத்தால் ”ஓ! இனி அவளுக்கு மாத மாத விசிட்டர் வருவார்களா?” என்று ஒரு அடி அடித்தார் பாருங்கோ!!

மாமி அடுத்து உட்கார்ந்தாள் ஊரில் உள்ள அனைவருக்கும் சந்தோஷ செய்தி சொல்ல. அடுத்த வீட்டு பூனை எலியிலிருந்து, அடுத்த ஊர் செல்லக்கிளிக்கு கூட ஒரு மணி நேரத்தில தெரிஞ்சி போச்சுங்கோ இந்நாட்டின் புதிய நிகழ்ச்சி. இதனால இன்னொரு நல்லதுன்னா, ரண்டு வருசமா சடச்சுகிட்டிருந்தா பெரிய பொண்ணோட மாமி பேசியாச்சு.(நல்ல காலத்தில ஒரு விடிவு பிறக்குமுன்னுவாங்களே, அது இதுதானா?)

இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நம்ப வீட்டிலே, விஷேசம் எப்படி, எங்கே வைப்பது? யாரெல்லாம் கூப்பிடறது?!! மண்டையிடி அளவில்லமால் எனக்கும் என்ற வீட்டுக்காரருக்கும்தான். வேறென்னா, என்னத்த சொல்லி கூப்பிடறது? நண்பர்கள் குழுவில எல்லாருக்கு பெண், ஆண் குழந்தை உண்டுங்க. பெண்ணை சமாளித்து விடலாம். பையன்களிடம் என்ன சொல்றது!!! இல்லேன்னா அவுக கேட்டு போடுவாங்களே,"எங்களுக்கு மீசை முளைக்க ஆரம்பிச்சாச்சு, ஒரு விழா எடுன்னு!!!

மூன்றாம் நாள் ஆலோசனைக் கூட்டம் தோழிகளுடன். தொலைபேசியில் விவாதம், விஷேசம் வைக்கணுமா, வேண்டாமான்னுதானுங்க. ஒரு தோழி சொன்னாளுங்கோ, அம்மாம்மாவை கேளுன்னு, நம்ப அம்மம்மாவின் விதுர ஆலோசனை தோழிகளிடம் மகாபிரசித்தமுங்க.

இப்படியாக நாலாம் நாள், அடி தொலைபெசியை அம்மம்மாவுக்கு.

அம்மம்மா: நல்ல செய்திதான் கண்ணு. அடி இன்னொரு போனஸ் எனக்கு. (பி.கு: அம்மம்மாவுக்கு தொன்னூறு வயசு. எந்த ஒரு குடும்ப விஷேசத்தையும் எண்பது வயசுலேருந்து வாழ்க்கையின் போனஸ் என்று சொல்லி கொண்டு இருக்குமுங்கோ!)

நான்: இதை ஒரு விஷேசமா கொண்டனுமாங்கம்மா? மாமியார் செய்யோனும் என்று சொல்றாங்கோ? மகளுக்கு அது ஒரு தொந்தரவாக இருக்குமே என்று நினைக்கிறோமுங்கம்மா.

அம்மம்மா: அந்த காலத்தில் இது ஒரு அறிவித்தலா இருக்கட்டுமுன்னு செஞ்சோம். இப்ப இது தேவையில்லைதான். ஆனால் உனது மாமியருக்காக நீ செய்யோனும் கண்ணு.

நான்: இந்த காலத்துலே அதுவும் இந்த ஊரில் இதெல்லாம் வேணாமுண்டு மாமியாருக்கு புரிய வைக்கலாமாங்கம்மா?

அம்மம்மா: நாங்க எல்லாம் இது மாதிரி ஏன் கொண்டாட விரும்புறோமென்னா, புள்ளைய இது மாதிரி சிங்காரிச்சி அழகு பாக்கத்தான். அது கலியாணம் கட்ற வயசு வரைக்கும் நாங்களெல்லாம், உயிரோட இருப்பமா, என்னாண்டு தெரியாத நிச்சயத்திலே இப்படி பாத்து போட்டமோன்னா நிம்மதியா இருப்போம் கண்ணு!

நான்: சரியம்மா, எத்தனாவது நாள் செய்யோனுமுங்கம்மா!

அம்மம்மா: நாள் கிழமையெல்லாம் தேவையில்லை, கண்ணு. உனது தோழிங்களுக்கு எந்த நாள் வசதியோ, அந்த நாள் தான் நல்ல நாள்.

இப்படியாக,அம்மம்மாவின் ஆலோசனையிலே ஒரு ஞாயித்துக்கிழமை பொண்ணுக்கு விஷேசம் நடத்தி போட்டோமுங்கோ!

நீங்க கேக்குறதுக்கு முன்னே சொல்லி போடுறேணுங்கோ, பையனுங்களுக்கு என்ன சொன்னோமுன்னு. அதுக்குத்தானுங்க தாய்களின் தினம் அன்று வைச்சதே!!!!!!

Wednesday, June 14, 2006

நான் கோழையா? விவேகியா?

ரொம்ப நாளா மனசுக்குள் ஒரு நிரடல் !!!

இதுவரை வந்த பாதையிலே நிறைய வேடதாரிகளை பார்த்தாச்சு. ஓவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!!!

வாழ்க்கையே நாடகமேடையில் அல்லது திரையில் என்பவர்களை பற்றி நான் சொல்லவில்லை! வாழ்வையை ஒரு மேடை என்று நினைத்துக்கொண்டு, நம்பளை எல்லாம் முட்டாளாக்கும் குள்ள நரிகளைப் பற்றித்தான்!

இப்படிப்பட்ட ஒரு கயவனை உங்கள் முன் கூண்டேற்ற விருப்பம்!!!

" படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்" அப்படின்னு பாட்டி சொன்ன பழமொழியை கேட்டதுண்டு. போலிச் சாமியார், பெண் சாமியார் என்று செய்திகளில் படித்துள்ளேன். ஆனால் இப்படி ஒருத்தரை நேரில் பார்த்தபொழுது எழுந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த சாமியார் விளையாடுவதெல்லாம் பச்சிளம் பாலகிகளில் இருந்து, பருவப்பெண் வரைக்கும். சாமியார் என்பதினால், இவர் காவி கட்டி, ஆச்ரமத்தில் வசிப்பவர் இல்லை. இரு பிள்ளைகளுக்கு அப்பன்.

தாய்நாட்டில் உறவினர்களை விட்டு அயல் நாட்டில் உள்ள நமது நாட்டினரில் தமது உறவுகளை கண்டு களிக்கும் மறத்தமிழர்களில் இவனும் ஒருவன். இந்த கயவனின் ஆதிமூலம்…....

தொழில் நுட்பத் துறையில் மேல் படிப்பு படித்து (என்ன படித்தானோ!!! இல்லை படித்தது இதையும் சேர்த்தா என்று தெரியவில்லை!!!!!) இந்தியாவிலும், இப்பொழுது இங்கும் ஒரு பெரிய புகழ்பெற்ற கம்பனியில் மேலதிகாரியாக பணியாற்றுபவன் (நல்ல கெட்-அப் தான்!) . வீடோ ஒரு சின்ன கோவில் மாதிரிதான். திரும்பிய இடமெல்லாம் மதகுருக்களின் படங்களும் (யார் யார் என்ற பேர் வேண்டாமே!!! அவர்களை அவமதிப்பது போலாகும் இவனின் திருவிளையாடல்கள்) வீட்டு புத்தகாலயமோ சமய, நீதி மற்றும் பெரும் போதகர்களின் புத்தகங்களால் நிறைந்து இருக்கும். காலை, மாலை என இரண்டு மனி நேர பூசைகள். உண்ணும் உணவோ உப்பு, காரம் தாளிதம் இல்லாமல் (அதனால்தான் சுரணை இல்லையோ என்னவோ!!!) இது எல்லாம் போதாது என்று வார விடுமுறை தினம் உள்ளூர்களில் சமய, வேத, உபநிஷத போதனைகள். வெளி நாட்டில் இதற்கு உள்ள மவுசை கேட்கவா வேண்டும். கூட்டமோ, கூட்டம். நமது வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கலாச்சாரத்தை கற்று கொள்ளவும் என்று ஆர்வமுடன் மொய்க்கும் இளைஞர் அணி ஒரு பக்கம்.

இத்துனை பெரிய சாமியாருக்கு எல்லா வீட்டிலும் பெரிய தடபுடல் வரவேற்பு. வீட்டில் பெரிசுகள் இருந்து விட்டால், இவன் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடுவான். " பாரு, இந்த வயசில் இப்படி ஒரு ஞானம் என்று" அழகான இப்படி ஒரு மாயக்கண்ணடி அனைவருக்கும் மாட்டி விட்டு விட்டு, இந்த ஆசாமி விளையாடுவதெல்லாம், வீட்டு பெண் குழந்தைகளிடம்தான். எப்படியோ அனைவரது கண்ணிலும் மண் தூவிவிட்டு சின்னச் சின்ன சில்மிஷங்களை ஆரம்பித்துவிடுவான்.

பாலியல் கல்வி என்பது, இங்கு பள்ளிகளில் உள்ளதுதான். ஆனால் அது ஐந்தாம் வகுப்பிலிருந்துதான். அது வரை "தொடுதல்" பற்றித்தான் பள்ளியில் சொல்லித் தருவார்கள். பெற்றோர்கள் (என்னையும் சேர்த்துதான்) பிள்ளகளை குழந்தையாகவே பாவித்து சில விடயங்களை சொல்லித்தருவதில்லை. (பிஞ்சிலே பழுக்க வேண்டாம் என்றுதான்)

இந்த சாமியாரின் லீலைகளைப்பற்றி நான் கேள்விப்பட்டபொழுதெல்லாம், நம்ப முடியாத அதியசமாகவே இருந்தது. சின்னப் பிள்ளைகளிடம் செய்த சில்மிஷங்களைப் பார்த்த பொழுது, ச்சீ, ச்சீ அப்படியெல்லாம் இருக்காது, எனது கண்ணோட்டம்தான் சரியில்லை, எனது கண்தான் காமாலைக்கண் என்று நினைத்து இருந்தேன்.

கடந்த இரு வாரத்திற்கு முன்பு குடும்ப தோழி எனக்கு தொலைபேசியடித்து அழமாட்டாத குறையாக, இவனின் திருவிளையாடல்களை (அவளது 16 வயது பருவப்பெண்ணிடம்) சொன்ன பொழுது, எனக்கு காமாலை கண் இல்லையென்று உறுதியானது. கணவரிடம் பேசும்பொழுது இனிமேல் அவனை வீட்டுக்குள்ளே விடக்கூடாது என்று முடிவு செய்தோம். ஆனால் இதனொடு கொடுமை முடியவில்லை.

இதுவரை கேள்வி ஞானமாக இருந்ததை, போன வார இறுதியில் கண்கூடாக கண்ட பொழுது அடைந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. ஓரு சக நண்பரின் வீட்டு விருந்துக்குக் சென்றிருந்தோம். விருந்து முடிந்து, சின்னச் சின்னக் கூட்டமாக அளவாலவிக்கொன்டிருந்தோம். நான் எனது பெண், மற்றும் நண்பர்களின் குழந்தைகள் எல்லோரும் ஹால்வேயில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த இவன் எனது தோழியின் பெண்ணை பின் புறமிருந்து கட்டி தழுவிவிட்டு எங்களிடம் கலந்து அசடு வழிய ஆரம்பித்தான்.

கண்ணெதிரே கண்ட வெறி, பளார் என்று ஒரு அறை விடவேணும் என்ற வேகம் இதனை அடக்கி கோட் பாக்கேட்டுக்குள் எனது கைகள், மானசீகமாக அவன் கழுத்தை நெறித்தது.

உடனேயே தண்டிக்க வேண்டும் என்ற ஆவேசம் இருந்தது. ஆனால் விவெகம் அதனை தடுத்து விட்டது!!!! அத்தனை பேர் முன்னிலும் அவனை அடிக்க எனக்கு தைரியம் இருந்தது, ஆனால் அவனை ஏன் அடித்தேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை.

இள ரத்தமாக இருந்த பொழுது இருந்த தைரியத்தை நான் இழந்து விட்டேனா? இதனின் தீர்வு என்ன? இவனை சமுகப்பிரஷ்டம் செய்வெதென்பதுதான் தீர்வா?

உதவுங்கள் நண்பர்களே….

Wednesday, June 07, 2006

எனது மகனின் பேரம்…..

பேரம் பேசி பொருள் வாங்கறது சிலவங்களுக்கு கை வந்த கலை.

நம்மளவர் இதில் சரியான திறமைசாலி. கடைக்காரன் சொல்லிய விலைக் கொடுத்துவிட்டால் அவருக்கு அந்த பொருள் இனிக்காது. வாங்கிய ஒரு சாமானில் பலிக்காது என்றால் இன்னொன்று வாங்கி அதையும் இதையும் சேர்த்து என்று ஒரு பேரம் பேசி விடுவார். இதனால் நமக்கு அடிக்கடி லாட்டரி அடிக்கும். வேறென்ன அவர் வேண்டாம் என்று தட்டிக் கழித்த பொருள்களையெல்லம் சந்தர்ப்பம் பார்த்து புகுத்தி விடுவது. இவரின் பாச்சா எதிலும் பலிக்க வில்லை என்றால் ” சீ, சீ இந்த பழம் புளிக்கும் கதையில் அந்த பொருளைப் பற்றி கடைக்காரன் எதிரில் பெசிகொண்டிருப்பார்” ஆண்டு இறுதி கணக்கு முடிப்பவன் என்றால், இவர் தலையில் அப்பொருளை கட்டி விடுவான். இதன் கடைசி முகமாக, அவன் பில் எழுதும்பொழுது, டெலிவரி கட்டணத்தையும் அவனிடம் கறந்து விடுவார்.

நமது பேரத்திறமையெல்லாம் பூக்காரி அளவோடு சரி. மற்றபடி, ஒரு கோர்ஸ் படித்தால்தான் திறமையை பட்டை தீட்ட முடியும்.

இது இங்கனம் இருக்க, எங்களுக்கு பிறந்த சீமந்த புத்திரன் அனைவரையும் தூக்கிச்சாப்பிட்டு ஒரு பேரம் பேசினார் பாருங்க தனது மூன்று வயதில்!!!

தில்லித்தலைநர் வாரச்சந்தையில் தத்தக்கா, புத்தக்கா என்று நடை பயின்று சென்றவர், திடீரென்று சப்பாத்திக்கல் விற்கும் கொல்லன் கடை முன் நின்று விட்டார்.

மகன்: ஹே! அண்ணா, இது என்ன விலை?
கொல்லன்: பதினைந்து ரூபாய், கண்ணு.
மகன்: சரி, சரி, இருபத்தைந்து ரூபாய்க்கு தா!!!!!!

சுற்றி இருந்தவர்களோ கொல்லென்று சிரிக்க, கொல்லன் மகனை வாரித்தூக்கி, உச்சி முகர்ந்து சப்பாத்திக்கல்லை கொடுத்தான். எத்தனை சொல்லியும் காசு வாங்கவில்லை. ஆனால், அடுத்தடுத்து, தில்லி சப்பாத்திக்கல் எனது உறவினர்கள் அனைவருக்கும் அவனிடம்தான் வாங்கினோம்(காசு கொடுத்துதான்).

இன்றும் சப்பாத்திக்கல்லை பார்க்கும் பொழுது, மகனின் தத்தக்கா நடையையும் அவரது சாமர்த்தியமான பேரத்தையும் நினைவு கூராமலிருப்பதில்லை.

கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு!!!!

அது ஏனோ இந்த கலரிடம் ஒரு தனி மயக்கம். பின்ன நீங்களே சொல்லுங்கள், கறுப்பு என்று ஒரு கலர் இல்லையென்றால் எத்தனை இழப்புகள்.

தலைமுடி கறுப்பாக இல்லையென்று எத்தனை பேருக்கு வருத்தம். வெள்ளை முடிக்காரரையும், இளநரைக்காரரையும் கேட்டால் தெரியும் முடியகத்தில் அவர் செலவழித்த பணக்கணக்கு.

இந்த கலர் முடிக்காரர்களை இதில் சேர்க்க வேண்டாம். என்னதான் காசு கொடுத்து கலர் அடித்துக்கொண்டாலும், புருவத்தையும் இமைமுடிகளையும் கருப்பாகத்தான் சாயம் பூசிக்கொள்கிறார்கள். இவர்களை பார்க்கும் பொழுது எனக்கு பிய்த்துக்கொண்டு போகும் சிரிப்பு. முடி நெற்றிக்கு மேலே பழுப்பு, சிவப்பு, வெண்சிவப்பு, சாம்பல் சிவப்பு, நெற்றிக்கு கீழேயோ கருப்பு. எனது மகனின் நர்சரி கார்ட்டூன் போல இருப்பார்கள்.

குழந்தை பிறந்தவுடன் முதல் கேள்வி, கறுப்பா சிவப்பா என்றுதான். மனதுக்குள்ளே அவர்களுக்கு ஒரு பதில்” எதுவாயிருந்தால் என்னய்யா! இரண்டு கால் கையோடு ஆரோக்கியமாக உள்ளதென்று”.

நான் மட்டும் கருப்பாக உள்ளேனே என்ற அங்கலாயிப்புக்கு, அம்மம்மாவிடம் ஒரு சொலவடை உண்டு. “ சும்மாயிருடி, சிவப்பிக்கு நகைப் போட்டு செருப்பாலே அடி, கறுப்பிக்கு நகை போட்டு கண்ணாலே ஒத்திக்கோ” என்று.

இந்த வெள்ளைக்காரர்களையோ கேட்கவே வேண்டாம். இப்படி மப்பு புடிச்சவர்களெல்லாம் இப்ப காசு கொடுத்து solarium-ல் கலர் மாற்றம் செஞ்சுக்கிட்டு வராங்க. எக்குமாத்தா நம்ம கையில ஒரு ஆராய்ச்சிகட்டுரை மாட்டிக்கொண்டது. கறுப்பு தோல்காரருக்கு தோல் புற்று எதிர்ப்பு சக்தி அதிகம் என்று. கேட்கவே வேண்டாம், இப்ப கைவசம் வைத்துக்கொண்டு எவள் நம்ம கலரை பழித்தாலும் அவளுக்கு ஒரு பதில் கொடுத்து இறுமாப்பு அடைந்து வருகிறேன்.

இப்பொழுது புரிகிறதா, கறுப்பின் மகிமை.

காதல் சின்னம்

எங்கேயோ படித்த ஹிந்தி கவிதை:

காதலிப்பதற்கு முன்:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் இன்னும் கிடைக்கவில்லை
அளவற்கரிய ஆசை இருக்கிறது

காதலிக்குங்கால்:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் கல்யாணம் இப்பொழுது வேண்டாம் என்கிறாள்
அளவற்கரிய ஆசை இருக்கிறது

கல்யாணத்திற்க்குப் பிறகு:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் இன்னும் சாகவில்லை
அளவற்கரிய ஆசை இருக்கிறது

Friday, June 02, 2006

பிள்ளையார் சுழி

எழுத்தாணி கூர் சீவி, பிள்ளையார் சுழி போட்டாயிற்று இன்று

பெயர் காரணம்!!!

யார் பிள்ளை என்ற ஐய்யத்தால்
உன் பெயர்
பிள்ளையாரா?
அனைவருக்கும் பிள்ளை என்பதால்
உன் பெயர்
பிள்ளையாரா?

சின்ன சின்ன ஆசை - 1

அளவில்லாத ஆசைகள் கனவுகள்.அரைக்கால் பாவடை முழங்காலுக்கு மேல் போட்ட பச்சிளம் பருவத்தின் அளவில்லாத ஆசைகள் என்னற்றவை.கமர்கட் மிட்டாய் ஃபேக்டரி அதில் ஒன்று. கமர்கட் மிட்டாய் சாப்பிட்டு இருந்தால் இது புரியும். அப்போ கிடைக்கிற அஞ்சு பைசாவில் மூலையில் உள்ள செட்டியார் கடையில் மூன்று கமர்கட் கிடைக்கும். அல்லது அக்காவுடன் கூட்டு சேர்ந்து பத்து பைசவாக்கி பள்ளி பியூன் கிட்ட வாங்கினால் எட்டு கமர்கட் கிடைக்கும். இந்த கூட்டு சேருவதற்கு அக்காவை தாஜா செய்ய வேண்டும். வெறு ஒன்றுமில்லை, அதிகாலையில் சாணி கரைத்து போட்டு வாசல் கூட்ட வேண்டும். இவ்வளவு செய்து கிடைக்கும் கமர்கட் பற்றி....கருப்பு கலரில் பெரிய எலந்தபழம் அளவு இருக்கும். அந்த வயசு அளவில் யோசித்து பார்க்கும் பொழுது வெல்லமும் தேங்காயும் சேர்ந்து செய்த மிட்டாய் என்று நினைக்கிறேன் (யாராவது தெரிந்தால் சொல்லவும்). வாயில் ஒன்று போட்டால் மெதுவாக கரைந்து (கடிக்காமல் இருந்தால்) ருசிதட்டும். மறந்து கடித்துவிட்டல் பின் பற்கள் எல்லாம் ஒட்டிகொண்டு, நாக்கு நுனிக்கு வேலை வைக்கும். பல் இடுக்கில் சிக்கிகொண்டு எடுக்கும் முயற்சியில் கணக்கு வாத்தியாரிடம் திட்டு வாங்க வைக்கும். சில பல கமர்கட்களில் உள்ள கற்துகல்கள் மயிர் சிலிர்க்க வைத்து எதிரில் உள்ளவர்கள் சொல்வது நிறைய நிஜம் என்று நம்ப வைக்கும்.அடிக்கடி அப்பாவிடம் காசு கிடைக்காது. அத்தி பூத்தாற்போல் அப்பாவிடம் காசு கிடைக்கும் வரை கமர்கட் கனவுகள் இலவசமாக வந்து போகும். அப்பொழுது எடுத்த முடிவு பெரியவளாகி சம்பாதிக்கும் காலத்தில் கைப்பை நிறைய கமர்கட் வாங்குவதுதான். தூக்கம் அப்படியும் வரவில்லையென்றல், ஒரு படி மேலே போய் கமர்கட் ஃபேக்டரி வைப்பதுதான். இதுவும் ஆகவில்லையென்றால் கமர்கட் ஃபேக்டரிகாரனை கல்யாணம் செய்வதுதான்.கடைசிவரை கமர்கட் எங்கு செய்கிறார்கள் என்று கண்டு புடிக்க முடியாததால் கனவுகள் பகற் கனவுகளாகவே ஆயிற்று.பெரியவளாகி ஊர் சென்று, பள்ளியைப் பார்த்தவுடன் முதல் நினைவு ப்யூனும் கமர்கட்டும்தான். வாசிக்கும் பிள்ளைகளிடம் கேட்டால் "அப்படியென்றால் என்ன அக்கா?" என்று கேட்கிறார்கள். பள்ளியின் சின்ன பெட்டிக்கடை, விற்பதோ உருளை கிழங்கு சிப்சும், மத்திய ப்ரதேசத்து மாங்காய் அப்பளமும்.எனக்குள்ளே ஒரு சந்தேகம்!!!! கமர்கட் வித்துவான் வாரிசு இல்லாமல் இறந்து விட்டரோ????அந்தோ எனது கமர்கட் ஃபேக்டரி.

சின்ன சின்ன ஆசை-2

பூஞ்சிட்டாக இருந்த காலத்தில் இன்னொன்று ஆசை!!!

கட்டு கட்டாக தலையில் பூ வைக்க!!

இரண்டு சுண்டு மல்லிகை 50 காசுக்கு கிடைக்கும். காய் மொக்குகளை கூட விடாமல் சரம் தொடுப்போம். மூன்று பங்காக (அம்மா, அக்கா மற்றும் நான்) பிரிக்கும் போழுதே எனக்கு மட்டும் இரண்டு இனுக்கு கூட பிரித்து அல்ப சந்தொஷம் அடைவேன். அப்பா அலுவலக விசயமாக தஞ்சாவூர் சென்றால் அக்கா கொய்யாப்பழம் கேட்க நான் தஞ்சாவூர் கதம்பம் கேட்பேன். பள்ளியில் அடுக்கு செம்பருத்தி சூடிக்கொண்டு வரும் தோழி கூட தற்காலிக எதிரியாவாள். மனோரஞ்சிதம் பூச்சூடிய தோழியோ ஜன்ம எதிரியாவாள். ரோசாப்பூ சுடியவளை நாள் முழுவதும் கேலி, கிண்டல் செய்து ஆற்றாமையை அடக்கிக் கொள்வேன். பனி பெய்யும் மார்கழி மாதத்தில் அதிகாலை ஐந்தரை மணிக்கு அரை மைல் நடந்து பத்து பைசாவுக்கு நூறு டிசம்பூர் பூ வாங்கி கட்டி வைத்துகொள்வேன்.

வீட்டின் பின்புறம் உள்ள அரையடி நிலத்தில் கனகாம்பரம் வளர்க்க எடுத்த பிரம்ம பிரயத்தனங்களை பற்றி ஒரு தொடர் கதையே எழுதலாம். பாட்டி வீட்டில் உள்ள சந்தன முல்லை கொடியில் ஏன் பரண் அமைக்கக்கூடாது என்று பெரிய ஆராய்ச்சியே நடத்தி உள்ளேன். பவள மல்லி பூவை ஏன் சூடக்கூடாது என்ற பட்டி மன்றம், அம்மம்மாவின் மேடையிலே தோற்று விட்டது.

கல்லூரி பெண்கள் விடுதி தோட்டத்தில் முல்லை பூ பந்தல் போட்டு முதல் பூவை பார்த்தவுடன் பிரசவித்த இறுமாப்பு. தொடுத்து, சூடிய சரத்திற்க்கு எதிரி சகமாணவன் ரூபத்தில். பதினெட்டு மாணவர்களில் ஒரு மாணவியாக இருந்ததால், பாலு சொன்னான் ” பூ வைக்காதே! எங்களில் ஒருத்தியாக இருக்க மாட்டாய்”

அப்பொழுது எடுத்த ஒரு முடிவு, பெரியவளாகி தோட்டம் சூழ்ந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சம்பளம் எல்லாம் பூக்காரனுக்கு என்று!!

இத்தனை பூ பைத்தியம் கண்டு அம்மா சொல்வாள் “ எந்தப் பூ இல்லாத காட்டில் உனக்கு கல்யாணமோ என்று?”

மதுரை மாப்பிள்ளை கிடைத்தவுடன் அம்மாவின் வாக்கு பொய்யானதோ என்ரு நினைத்தேன்!!! அல்ப சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. மாப்பிள்ளை வேலை தலைநகர் தில்லியில். தமிழ்நாடு விரைவு வண்டியில் வழியெல்லாம் பூங்கொத்து கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். வீட்டை அடைந்ததும் மனது ஜிவ்வென்று பரந்தது, விரிந்திருந்த அடுத்த வீட்டு சிவப்பு ரோசவைப் பார்த்து. அடுத்த வீட்டு பஞ்சாபி மாமிக்கு இட்லி, சாம்பார் கொடுத்து எப்படியாவது ஒரு ரோசா சம்பாரித்து விடலாம் என்று அந்த நிமிடமே ஒரு உள்மனது தீர்மானம். அப்படியாக ஒரு நாள் ரோசா சம்பாரித்து கல்லூரிக்கு சூடிக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தால் அத்தனை மாணாக்கர்களின் முகமும் அமுக்கவொண்ணா சிரிப்புடன். அர்த்தம் புரியாமல் சக விரிவுரையளரிடம் விசாரித்தால் புரிந்தது, தில்லியில் பூ வைக்கும் பெண்ணுக்கு வேறு ஒரு அர்த்தம் என்று!!!!

வீட்டுக்கனவு என்னவோ நினைவானது சிட்னி மாநகரில். பூக்கனவு பகற்கனவு ஆகிவிட்டது!!!

வழியில் உள்ள பூக்களை ஒரு நிமிடம் தலையில் சூடிய கனவு கண்டு, அதிக ஆசை இருந்தால் பூ- வரிசை படங்களை (உபயம் – கோலிவுட்) சின்னத்திரையில் கண்டு வாழ்க்கை உருண்டு கொண்டு உள்ளது.

அந்தோ! நானும் ஏனது பூ ஆசையும்.