Wednesday, June 07, 2006

எனது மகனின் பேரம்…..

பேரம் பேசி பொருள் வாங்கறது சிலவங்களுக்கு கை வந்த கலை.

நம்மளவர் இதில் சரியான திறமைசாலி. கடைக்காரன் சொல்லிய விலைக் கொடுத்துவிட்டால் அவருக்கு அந்த பொருள் இனிக்காது. வாங்கிய ஒரு சாமானில் பலிக்காது என்றால் இன்னொன்று வாங்கி அதையும் இதையும் சேர்த்து என்று ஒரு பேரம் பேசி விடுவார். இதனால் நமக்கு அடிக்கடி லாட்டரி அடிக்கும். வேறென்ன அவர் வேண்டாம் என்று தட்டிக் கழித்த பொருள்களையெல்லம் சந்தர்ப்பம் பார்த்து புகுத்தி விடுவது. இவரின் பாச்சா எதிலும் பலிக்க வில்லை என்றால் ” சீ, சீ இந்த பழம் புளிக்கும் கதையில் அந்த பொருளைப் பற்றி கடைக்காரன் எதிரில் பெசிகொண்டிருப்பார்” ஆண்டு இறுதி கணக்கு முடிப்பவன் என்றால், இவர் தலையில் அப்பொருளை கட்டி விடுவான். இதன் கடைசி முகமாக, அவன் பில் எழுதும்பொழுது, டெலிவரி கட்டணத்தையும் அவனிடம் கறந்து விடுவார்.

நமது பேரத்திறமையெல்லாம் பூக்காரி அளவோடு சரி. மற்றபடி, ஒரு கோர்ஸ் படித்தால்தான் திறமையை பட்டை தீட்ட முடியும்.

இது இங்கனம் இருக்க, எங்களுக்கு பிறந்த சீமந்த புத்திரன் அனைவரையும் தூக்கிச்சாப்பிட்டு ஒரு பேரம் பேசினார் பாருங்க தனது மூன்று வயதில்!!!

தில்லித்தலைநர் வாரச்சந்தையில் தத்தக்கா, புத்தக்கா என்று நடை பயின்று சென்றவர், திடீரென்று சப்பாத்திக்கல் விற்கும் கொல்லன் கடை முன் நின்று விட்டார்.

மகன்: ஹே! அண்ணா, இது என்ன விலை?
கொல்லன்: பதினைந்து ரூபாய், கண்ணு.
மகன்: சரி, சரி, இருபத்தைந்து ரூபாய்க்கு தா!!!!!!

சுற்றி இருந்தவர்களோ கொல்லென்று சிரிக்க, கொல்லன் மகனை வாரித்தூக்கி, உச்சி முகர்ந்து சப்பாத்திக்கல்லை கொடுத்தான். எத்தனை சொல்லியும் காசு வாங்கவில்லை. ஆனால், அடுத்தடுத்து, தில்லி சப்பாத்திக்கல் எனது உறவினர்கள் அனைவருக்கும் அவனிடம்தான் வாங்கினோம்(காசு கொடுத்துதான்).

இன்றும் சப்பாத்திக்கல்லை பார்க்கும் பொழுது, மகனின் தத்தக்கா நடையையும் அவரது சாமர்த்தியமான பேரத்தையும் நினைவு கூராமலிருப்பதில்லை.

No comments: