Friday, August 18, 2006

இப்படியும் ஒரு கணக்கு

ஒரு வருசத்துக்கு - 8896.66 வெள்ளி
ஒரு மாசத்துக்கு – 741.38 வெள்ளி
ஒரு வாரத்துக்கு – 171.08 வெள்ளி
ஒரு நாளைக்கு – 24.24 வெள்ளி
ஒரு மணி நேரத்துக்கு – சராசரி ஒரு வெள்ளி

இது என்ன கணக்கு தெரியுமா? எங்க நாட்டு அரசாங்க கணக்கு.

மத்திய வர்க்க குடும்பத்துல ஒரு குழந்தையப் பெத்து 18 வயசு வரைக்கும் வளக்கறதுக்கு ஆகுற செலவு 160140 வெள்ளிகள். (இந்திய ரூபாயுக்கு 52,84,620 ). இது பள்ளிகூடம் படிக்கிற வரைக்குந்தான். காலேஜ் செலவு, நன்கொடை எதுவும் கிடையாது. (ஆத்தாடி, இம்புட்டு ரூவாயான்னு ஏங்கறது என் மாமியாருதான்!!!!)

இத பார்க்கும் பொழுது கொஞ்சம் பணம் பார்க்கணும்னா குழந்தைய வேணாமுன்னு இருக்கறதுதான். அப்படியும் இருக்கிறாங்கோ நிறைய பேர் இங்கே. அவங்களுக்கெல்லாம் DINKS- ன்னு பேரு- Double Income No Kids). இவங்களுக்கெல்லாம் தெரியுமா, என்னத்த இழக்கிறாங்கன்னு???

160140 வெள்ளி செலவு செஞ்சா:
நம்ம இஷ்டத்துக்கு பேரு வைக்கலாம் (தற்காலிக தலைவராயித்தான்)
கோவிலுக்கு போகாமலே கடவுள தினத்துக்கு பார்த்துக்கலாம்
நடு ராத்திரி போர்வைக்குள்ளேர்ந்து சிரிப்பையும்(சிலசமயம் அழுகையையும்) கேட்கலாம்
உங்களாலேயே தாங்க முடியாத பாசத்தை பார்க்கலாம்
Flying கிஸ்ஸையும், ஐ லவ் யூ அப்படின்னு அடிக்கடி கேட்கலாம்
எறும்பையும், மரத்தையும், யானையையும், பூனையையும் பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம்
பற்றிக் கொள்ள ஒரு கை கிடைக்கும் (என்னா, மிட்டாய் பிசுக்கும், ஐஸ் க்ரீம் சபக்கும் சேர்த்துத்தான்)
வேலையே பறிபோயிருந்தாலும், கப்பல் கவிழ்ந்திருந்தாலும், வீட்டுக்கு வந்தோன்ன சிரிக்கலாம்

160140 வெள்ளி கொடுத்து, உங்க வயச மறந்துட்டு:
க்ரேயான் கலரடிக்கலாம்
சாட்-பூட்-த்ரீ விளையாடலாம்
ஒளிஞ்சு புடிச்சு விளையாடலாம்
தட்டாம்பூச்சி பிடிக்கலாம்
இடி இடிச்சா அர்ஜூனா காப்பாத்துன்னு சரணடையலாம்

160140 வெள்ளி கொடுத்து:
மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு, ஜேம்ஸ்பாண்ட் கதை படிக்கலாம்
எந்த தொந்தரவுமில்லாம Tom and Jerry கார்ட்டூன் பார்க்கலாம்
வெட்கமில்லாம அரிச்சுவடி திரும்ப படிக்கலாம் (இந்த முறையாவது சரியா படிக்கலாம்)

160140 வெள்ளி கொடுத்து அப்பப்ப வீட்டுல கதாநாயகன் ஆகலாம், இப்படி:
ஒழுங்கா பட்டம் விட்டு
சைக்கிள் சங்கிலி மாட்டி விட்டு
சரியா பம்பரம் குத்தி
குறி தவறாம கோலி அடிச்சி
காலுல தச்ச முள்ள நோகாம எடுத்துவிட்டு
சரியா பௌலிங் போட்டு

160140 வெள்ளி கொடுத்து, சரித்திர நிகழ்வுகள கண்கூடா பார்க்கலாம்:
முதல் அடியெடுத்து நடந்தத
முதல் வார்த்தை பேசியத
முதல் முத பள்ளி சென்றத
முதல் மேடையேற்றத்த
முதல் முற காரோட்டியத

160140 வெள்ளி கொடுத்து,
இலவசமா மனவியல், செவிலியியல், நீதியியல் அப்படின்னு எல்லா துறையிலும் முதுகலை பட்டம் வாங்கிவிடலாம்.

இப்படி எல்லாம், 160140 வெள்ளி கொடுத்து வேறெங்காவது கிடைக்குமா? சொல்லுங்களேன்

டிஸ்கி: இது எங்கேயோ படிச்ச கட்டுரையின் பாதிப்பு!!!!!

13 comments:

FAIRY said...

மிகவும் அருமையான கணக்கு. எப்படி இப்படி எல்லாம்....நான் என்ன சொல்வதென்றே எனக்கு புரியவில்லை. பணம் பத்தும் செய்யும் என்பது இது தானோ?

வல்லிசிம்ஹன் said...

160140 வெள்ளியா?
கஸ்தூரிப்பெண்ணே.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு
என்ன செலவழித்தோம்னு ஞாபகம்
இல்லை.
ஆனால்
எங்க ஊரு கட்டாயம் சல்லிசு தான்.
அருமையான படைப்பு.
கவிதை நடையாக இயல்பாக இருக்கிறது.
குங்குமம் இது வரை வாங்கிப் படித்தது இல்லை. இனிமேல் வாங்கலாம்.
சக வலையாளர்களை அங்கே பார்க்கலாமே.வாழ்த்துகள்.

வடுவூர் குமார் said...

திரு கோ சொன்னது தானே இந்த டிங்க்ஸ்?
நானும் படித்தேன் போன சனிக்கிழமை பேப்பரில்.
பிரதமர் கொடுத்த சலுகையில் இப்போது நிறைய கர்பிணி பெண்களையும்,ரயிலின் உள் குழந்தைகளின் அழுகையும் பார்க்க/கேட்க முடிகிறது.
ஏன்,இரவு நடையின்போது குழந்தைகளுடன் பலர் போவதையும் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது.

கஸ்தூரிப்பெண் said...

தேவதையே!

இப்படியெல்லாம் கணக்கு பார்த்து பயந்து போனதுனாலே, எங்க ஊரு மக்கள் தொகை பெருகவேயில்லை.

பார்த்தாரு பிரதமரு
அறிவிச்சாரு பாருங்க ஒரு சலுகைய....
பிள்ள பெத்துக்கிட்டா, 3000 வெள்ளின்னு!!!!
மத்த கணக்க மறந்து, பிள்ள பெத்துகிட்டவங்களும் உண்டு.

கஸ்தூரிப்பெண் said...

வள்ளிக்கு,

நம்பல்லாம் இந்த செலவுக்கணக்கு எப்ப பார்த்திருக்கோம். இதனால வர வரவுதான் பெரிய சந்தோஷமா இருந்தது!!! 12 பெற்ற அம்மம்மாவ கோவில் கட்டி கும்பிடனும்னு தோணுது.

குங்குமம் படிச்சிங்களா? எங்களுக்கு இன்னும் இங்க வரவில்லை. ஏப்படி இருந்தது..... ஸ்கேன் பண்ணி போடமுடியுமா?

கஸ்தூரிப்பெண் said...

வடுவூர் குமார் அவர்களே வருகைக்கு நன்றி!

//பிரதமர் கொடுத்த சலுகையில் இப்போது நிறைய கர்பிணி பெண்களையும்,ரயிலின் உள் குழந்தைகளின் அழுகையும் ...//
ஆனாலும் பிள்ள பெத்துக்கிறவங்க எல்லாம் இங்க குடியேறினவுங்கதான். மற்றவங்க இன்னும் வரவு - செலவு கணக்குலேயே நிக்கிறாங்க.

//திரு கோ சொன்னது தானே இந்த டிங்க்ஸ்?//

யாருங்க இந்த கோ??

//ஏன்,இரவு நடையின்போது குழந்தைகளுடன் பலர் போவதையும் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது//


எங்க ஊருலயா இருக்கீங்க?

வடுவூர் குமார் said...

இதென்னங்க இப்படி ஆயிடுச்சு,சிங்கப்பூரில் என்று நினைத்தேன்.இங்கும் கொடுக்கிறார்கள் ஆனால் எவ்வளவு என்று தெரியவில்லை.
கோ-மூத்த அமைச்சர் இங்கு.குழப்பத்துக்கு சாரி.

கஸ்தூரிப்பெண் said...

வடுவூர் குமார் அவர்களே!

உங்க பதிவுகள பார்த்து சிங்கபூருன்னு தெரிஞ்சது. ஒரு வேள எங்க ஊருக்கு மாற்றல் ஆகிவிட்டதோன்னு நினைச்சேன்.

நீங்க VDP மாணவர்தானே?

நாகை சிவா said...

ஊருஸ், என்ன இது?
இம்புட்டு எல்லாம் எனக்கு எங்க நைனா செலவு செய்யல. இது வரைக்கும் செய்ததே தண்ட செலவுனு சொல்லிகிட்டு இருக்கார்.

ஆம்! நம் குமார் வ.தே.பா. மாணவர் தான்.

வடுவூர் குமார் said...

ஆமாங்க.
நீங்களுமா??

கஸ்தூரிப்பெண் said...

ஊர்ஸ்,
ஏதோ பொம்பள புள்ளயா போனதொட்டு, கூடகொஞ்சம் தண்டம் வச்சிபுட்டு, வூட்டவிட்டு கிளம்பியாச்சு.
//இது வரைக்கும் செய்ததே தண்ட செலவுனு சொல்லிகிட்டு இருக்கார்.//

இப்பதான் சம்பாரிக்கிறீங்கள, அவரு செலவ வரவாக்கி விடவேண்டியதுதானே?

கஸ்தூரிப்பெண் said...

ஊர்ஸ் & குமார்,

நானில்லைங்க. வீட்டில அண்ணா, தம்பியெல்லாம் அங்கிருந்துதாங்க. நான் பெரும வாய்ந்த ந.த.மே. (வையும்போது மட்டும் ந.த.ஊ.த) பள்ளி வரைக்குந்தாங்க ஊருலயேயிருந்தேன். தோழிங்களெல்லாம் அங்கதான் AMIE படிச்சாங்க. எங்க நைனா அதுக்கு ஒத்துக்காததுல கொங்கு நாட்டுக்கு போயிவிட்டங்க.

வல்லிசிம்ஹன் said...

பெண்ணே, கஸ்தூரி
குங்குமம் பார்த்தேன். ஸ்கானிங் வசதி என் கம்ப்யூடரில்
இல்லைம்மா.

என் வலைப்பூவில் உங்க பின்னூட்டம் பப்லிஷ் செய்ய முடியலை. சரியாகிவிடும்.
ரொம்ப நன்றி.
நிறைய பூக்கள் உங்கள் வாழ்வில் வசந்தம் எப்போதும் கொடுக்க என் வாழ்த்துக்கள்.