இன்னக்கி காலையில, பொண்ணோட பள்ளியில பரிசளிப்பு விழா. ஆண்டு இறுதியில, ஒவ்வொரு பாடத்திலயும் சிறப்பா செஞ்சவங்களுக்கு பரிசு கொடுக்கிற விழா. நம்மூரு மாதிரி ஆண்டு விழான்னு நடத்தாம, காலைப் பிரார்த்தனை கூட்டத்தில் வைச்சு கொடுக்கிறாங்க. பார்லிமெண்டு உறுப்பினருதான் சிறப்பு விருந்தினர். கருப்பு பூனை, சாம்பல் பூனையின்னு கலர்ப்பூனைகள் இல்லாமல், தானாகவே வண்டியோட்டி, பள்ளியின் பக்கத்து சந்தில் காரை நிறுத்தி நடந்து வரும் சாதரணமான ஜனநாயக உறுப்பினர்.
இது இப்படியிருக்க, நம்ம பிரச்சனை ஆரம்பிச்சதெல்லாம், பிள்ளைகள பெயர் சொல்லி பரிசு வாங்க கூப்பிடறப்பதான். பொண்ணு பள்ளியில படிக்கிறதுல எண்பது சதவிகித பிள்ளைக இந்தியா அல்லது இலங்கை நாட்டைச் சேர்ந்தவங்க. ஊருல உள்ள சாமி, குலதெய்வம், அம்மா தாத்தா, அப்பத்தா, அம்மாச்சின்னு விவரணையா நம்ம பிள்ளைக பேரு. அத கொள்ள(ல்ல) பிரியம் இங்க உள்ளவங்களுக்கு.
காயத்ரி-ய காய் ஆட்ரி-ன்னு பிரிச்சி கூப்பிட்டா, பக்கத்துல உட்கார்ந்திருந்த அம்மாக்காரிக்கு, பொண்ணு பரிசு வாங்க போனப்பதான், கூப்பிட்டது தன் பொண்ணையின்னு விளங்குது. வீடியோ காமரா, டிஜிடல் காமரான்னு முத்தாய்ப்பா உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மா, தன் புள்ள பேரோட வாசிச்ச தன் புருஷன் பேர கேட்டு மயக்கமாகாத குறைதான்!!! பின்ன என்ன, கருணாநிதின்னு கருணை உருவமான பேர, கருண் அனிதின்னு(Karun anidhi) வாசிச்சா வருமா வராதா மயக்கம். குசேலராசன், குஸ் ஹலராசனாவும், ராசேந்திரன் ரசந்திரனுமாகவும் இவங்க வாயில பூந்து புறப்படும்.
ஆனா அதே சமயத்துல, மகாவ்ச்கி, பொலாவ்ச்கின்ற போலந்து பெயரையும், இவானிசெவிச், டொமினிசெவிச்-ன்ற ரஷ்யா பெயரெல்லாம் அட்சர சுத்தமா கூப்பிடுவாங்க. அவங்க பெயர கொஞ்சம் நீட்டியோ, சுருக்கியோ சொல்லிட்டோமுன்னா, மூக்குக்கு மேல வர கோபத்த அடக்கிகிட்டு, அமண்டா இல்ல, அமாண்டா-ன்னு சொல்ல சொல்லி ஒரு வீட்டு பாடம் கொடுத்துட்டு போவாங்க!!! இதுக்கெல்லாம் பயந்துகிட்டு பவானி குமார், பீட்டர்-ன்னும், தியாகராஜன், டாம்-ன்னும் பெயர மாத்திகிட்டாங்க.
எல்லாம் விதின்னு, வெந்து நொந்து, விழா முடிவுல காபி குடிக்கையில, பக்கத்துல உள்ள தோழியோட அவசர ஆலோசனை. இந்த ஊரு ஆளுங்களுக்கு உச்சரிப்பு வகுப்பு எப்ப ஆரம்பிக்கலாமுன்னு. வாரத்துக்கு எத்தனை வகுப்பு எடுக்கலாம், இலவசமா அல்லது காசு கொடுத்தா, எவ்வளவு பணம் சம்பாதிக்கலாமுன்னு ஜெட் வேகத்துல ஓடுது மனக்குதிர ஒரு பக்கம். பட்டாசு மாதிரி வெடிக்கிறா தோழி, “இதெல்லாம் இவங்களுக்கு சரிப்படாதப்பா. ஒரு தடவை இல்ல, ரண்டு தடவை இல்ல, பல்லாயிரம் தடவை சொல்லச்சொல்லி சொன்னாலும், நம்மூரு பெயரு இந்த ஆளுங்களுக்கு வாயில நுழையப் போவதில்லை. நாக்குல தர்ப்பைய சுட்டு போட்டாலும், இவங்களுக்கு வாயில வரப்போறது கிடையாது” னு ஆணித்தரமா அவ அடிச்சு பேசும்போது எனக்கு பிடிபடல வினையே அங்கதான் ஆரம்பிக்க போதுன்னு.
எதுத்தாப்புல பொண்ணு உட்கார்ந்து கேள்வி கேக்குது, “எதுக்காக, தர்ப்பைய சுட்டு போட்டாலும் வாயில வராதுன்னு சொல்லுவாங்க?”
எனக்கு புரியலிங்களே, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!!!
Tuesday, December 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கஸ்தூரிபெண்,
ஒருவேளை பழைய காலத்தில் சீடர்களை ஆசிரியர்கள் இப்படித் தண்டித்து இருப்பார்களோ?
''சரியாச் சொல்லு இல்லையீன்னா முதுகு வீங்கிப்போகும் '' என்ற அந்தக் காலப் பாட்டு ஞாபகம் வந்தது.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
kaddaRuththa thamiz azakaka irukku
V.I.S.Jayapalan (poet)
visjayapalan@yahoo.com
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
Post a Comment