ஒரு வருசத்துக்கு - 8896.66 வெள்ளி
ஒரு மாசத்துக்கு – 741.38 வெள்ளி
ஒரு வாரத்துக்கு – 171.08 வெள்ளி
ஒரு நாளைக்கு – 24.24 வெள்ளி
ஒரு மணி நேரத்துக்கு – சராசரி ஒரு வெள்ளி
இது என்ன கணக்கு தெரியுமா? எங்க நாட்டு அரசாங்க கணக்கு.
மத்திய வர்க்க குடும்பத்துல ஒரு குழந்தையப் பெத்து 18 வயசு வரைக்கும் வளக்கறதுக்கு ஆகுற செலவு 160140 வெள்ளிகள். (இந்திய ரூபாயுக்கு 52,84,620 ). இது பள்ளிகூடம் படிக்கிற வரைக்குந்தான். காலேஜ் செலவு, நன்கொடை எதுவும் கிடையாது. (ஆத்தாடி, இம்புட்டு ரூவாயான்னு ஏங்கறது என் மாமியாருதான்!!!!)
இத பார்க்கும் பொழுது கொஞ்சம் பணம் பார்க்கணும்னா குழந்தைய வேணாமுன்னு இருக்கறதுதான். அப்படியும் இருக்கிறாங்கோ நிறைய பேர் இங்கே. அவங்களுக்கெல்லாம் DINKS- ன்னு பேரு- Double Income No Kids). இவங்களுக்கெல்லாம் தெரியுமா, என்னத்த இழக்கிறாங்கன்னு???
160140 வெள்ளி செலவு செஞ்சா:
நம்ம இஷ்டத்துக்கு பேரு வைக்கலாம் (தற்காலிக தலைவராயித்தான்)
கோவிலுக்கு போகாமலே கடவுள தினத்துக்கு பார்த்துக்கலாம்
நடு ராத்திரி போர்வைக்குள்ளேர்ந்து சிரிப்பையும்(சிலசமயம் அழுகையையும்) கேட்கலாம்
உங்களாலேயே தாங்க முடியாத பாசத்தை பார்க்கலாம்
Flying கிஸ்ஸையும், ஐ லவ் யூ அப்படின்னு அடிக்கடி கேட்கலாம்
எறும்பையும், மரத்தையும், யானையையும், பூனையையும் பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம்
பற்றிக் கொள்ள ஒரு கை கிடைக்கும் (என்னா, மிட்டாய் பிசுக்கும், ஐஸ் க்ரீம் சபக்கும் சேர்த்துத்தான்)
வேலையே பறிபோயிருந்தாலும், கப்பல் கவிழ்ந்திருந்தாலும், வீட்டுக்கு வந்தோன்ன சிரிக்கலாம்
160140 வெள்ளி கொடுத்து, உங்க வயச மறந்துட்டு:
க்ரேயான் கலரடிக்கலாம்
சாட்-பூட்-த்ரீ விளையாடலாம்
ஒளிஞ்சு புடிச்சு விளையாடலாம்
தட்டாம்பூச்சி பிடிக்கலாம்
இடி இடிச்சா அர்ஜூனா காப்பாத்துன்னு சரணடையலாம்
160140 வெள்ளி கொடுத்து:
மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு, ஜேம்ஸ்பாண்ட் கதை படிக்கலாம்
எந்த தொந்தரவுமில்லாம Tom and Jerry கார்ட்டூன் பார்க்கலாம்
வெட்கமில்லாம அரிச்சுவடி திரும்ப படிக்கலாம் (இந்த முறையாவது சரியா படிக்கலாம்)
160140 வெள்ளி கொடுத்து அப்பப்ப வீட்டுல கதாநாயகன் ஆகலாம், இப்படி:
ஒழுங்கா பட்டம் விட்டு
சைக்கிள் சங்கிலி மாட்டி விட்டு
சரியா பம்பரம் குத்தி
குறி தவறாம கோலி அடிச்சி
காலுல தச்ச முள்ள நோகாம எடுத்துவிட்டு
சரியா பௌலிங் போட்டு
160140 வெள்ளி கொடுத்து, சரித்திர நிகழ்வுகள கண்கூடா பார்க்கலாம்:
முதல் அடியெடுத்து நடந்தத
முதல் வார்த்தை பேசியத
முதல் முத பள்ளி சென்றத
முதல் மேடையேற்றத்த
முதல் முற காரோட்டியத
160140 வெள்ளி கொடுத்து,
இலவசமா மனவியல், செவிலியியல், நீதியியல் அப்படின்னு எல்லா துறையிலும் முதுகலை பட்டம் வாங்கிவிடலாம்.
இப்படி எல்லாம், 160140 வெள்ளி கொடுத்து வேறெங்காவது கிடைக்குமா? சொல்லுங்களேன்
டிஸ்கி: இது எங்கேயோ படிச்ச கட்டுரையின் பாதிப்பு!!!!!
Friday, August 18, 2006
Subscribe to:
Posts (Atom)